#2506 to #2508

#2506. முத்திக்கு வித்து முதல்வன் ஞானமே

முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.

முக்தி என்ற வீடுபேற்றை அடைவதற்கு உரிய வாயில் சீவன் சிவஞானம் பெறுவதே ஆகும்.
பக்தி செய்வதற்கு உரிய வாயில் சீவன் தன் முனைப்பினை விட்டு விட்டுப் பணிந்து சிவன் பாதங்களைப் பற்றுவதே ஆகும்.
அட்டமா சித்திகள் அடைவதற்கு உரிய வாயில் சீவன் சிவத்துடன் சிவனாகப் பொருந்துவதே ஆகும்.
சக்தியை அடைவதற்கு உரிய வாயில் சீவன் விருப்பு வெறுப்புக்கள் இன்றி அடங்கி இருத்தல் ஆகும்.

#2507. உபசாந்தம் அமையும்

காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
காரிய காரண வாதனைப் பற்றறப்
பாரண வும் உப சாந்தப் பரிசிதே.

சீவனின் காரிய உபாதைகள் ஏழும் முறைப்படித் தூவா மாயையில் ஒடுங்கி இலயம் அடைந்து விடும். சீவனின் காரண உபாதிகள் ஏழும் முறைப்படிச் சிவத்திடம் சென்று இலயம் அடையும். காரிய காரண உபாதிகளின் வாசனை அறவே நீங்கிய பின்னர், உபசாந்தம் என்ற விருப்பு வெறுப்பு அற்ற உயரிய அமைதியான மனோநிலை தோன்றும்.

#2708. சிவ வியாபகம் தரும் உபசாந்தம்

அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்
முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி
மன்னும் பரங்காட்சி யாவது உடனுற்றுத்
தன்னின் வியாத்தி தனில்உப சாந்தமே.

சாக்கிர துரியத்தில் ஆன்மா சுத்தி அடையும். பர துரியத்தில் ( சாக்கிரதாதீத துரியத்தில்) பரம் வெளிப்படும். சீவன் சிவதுரியத்தில் சென்று சேர்வது சீவனுக்கு உபசாந்தம் அளிக்கும்.