#2233 & #2234

#2633. பரானந்த போதர்

முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்
தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி
மெய்த்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்
பத்தியி லுற்றோர் பரானந்த போதரே.

பரானந்த போதர்கள் எவர்?
இவர்கள் முத்தி நிலையில் சிவபெருமானின் முழு அருளையும் பெற்றவர்கள்.
முப்பாத்தாறு தத்துவங்களும் ஆன்மாவிலிருந்து வேறுபாட்டன என்பதை அறிந்தவர்கள்.
தன்பணி இறைவனை எண்ணி இருப்பதே என்று மெய்தவத்தை மேற்கொண்டவர்கள்.
தாம் செய்கின்ற வினைகளையும் செயல்களையும் விட்டு ஒழிந்தவர்கள்.
உண்மையான இறை பக்தியில் அமிழ்ந்து சிவானந்தத்தில் திளைப்பவர்கள்

#2634. நலம் கொண்ட நால்வர் நாடுவர்

வளங்கனி தேடிய வன்தாள் பறவை
உளங்கனி தேடி உழிதரும் போது
களங்கனி அங்கியிற் கைவிளக் கேற்றி
நலங் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே.

சிவக்கனியை நாடும் மூலாதாரத்தில் கால்களை பதித்துள்ள சீவன் என்னும் பறவை. தன் உள்ள மண்டலத்தில் உள்ள சிவக்கனியை சீவப் பறவை நாடும் போது, கழுத்துக்கும் மேலே உள்ள அக்கினியால் சுழுமுனையில் விளக்கை ஏற்றும். அப்போது அந்தக் கரணங்கள் நான்கும் உடல் அற்ற இடத்தில் சிவானந்தத்தில் திளைத்து இருக்கும்.