#2628 to #2632

#2628. பணி ஒன்றும் இல்லையே

பெத்தத்துந் தன்பணி இல்லை பிறத்தலால்
முத்தத்துந் தன்பணி இல்லை முறைமையால்
அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலாற்
பத்திப்பட் டோர்க்குப் பணியொன்றும் இல்லையே.

பாசத்தால் கட்டுண்டவர்கள் பிறவியைக் கடவாதவர்கள். அதனால் அவர்கள் செயலால் பயன் எதுவும் விளையாது. பாசத் தளைகளைத் துணித்து விட்டவர்கள் நேசத்துடன் ஈசனைச் சிந்தித்து அமைந்திருப்பர். அதனால் அவர்கள் செய்ய வேண்டிய செயலென்று ஒன்றுமில்லை. பாசத் தளையில் அகப்பட்டவருக்குப் பிறவியும், பாசத் தளைகளைத் துணித்தவருக்கு முக்தியும் அருள்வது ஈசன் செயல். அதனால் நேசத்துடன் ஈசனைப் பற்றிக் கொண்டு இருப்பவர்கள் செய்ய வேண்டிய செயல் என்று ஒன்றும் இல்லை.

#2629. நந்தி அல்லாது வேறு தெய்வம் இல்லை

பறவையிற் கற்பமும் பாம்பும் மெய்யாக
குறவஞ் சிலம்பக் குளிர்வரை யேறி
நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால்
இறைவனென் றென்மனம் ஏத்தகி லாவே.

உடலின் காயகல்பமாகக் குண்டலினி சக்தி விளங்குகின்றது. அதை எழுப்பி, உடலில்,மேல் நோக்கிச் செலுத்தி, நாத ஒலி கேட்கும் தலை உச்சியாகிய மேருமலையை அடைந்தேன். அங்கு விளங்கும் ஒளி மண்டலத்தில் ஏறினேன். தேன் சிந்தும் சகசிர மலரைக் கொண்டு என் பெருமானை நான் வழிபட்டேன். என் தலைவன் சிவனைத் தவிர்த்து வேறு தெய்வங்களை வழிபடுவதற்கு என் மனம் என்றும் ஒப்பாது!

#2630. பிறப்பறுத்து உய்மின்!

உறுதுணை நந்தியை உம்பர் பிரானை
பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின்
செறிதுணை செய்து சிவனடி சிந்தித்து
உறுதுணை யாயங்கி யாகிநின் றானே.

தன் அடியவருக்கு சிவன் உறுதுணை ஆவான்! அவன் உம்பர்களின் ஒப்பற்ற பிரான்! அவனைத் துணையாகப் பெற்றுப் பிறவிப் பிணியை அறுத்து எறியுங்கள்! உய்வடைந்து கடைத்தேறுங்கள்! சிவனைச் செறிந்த துணைவனாகக் கொண்டு சிந்தையை அவன் சீரடிகளில் கொண்டு பொருத்தினால், உறுதுணையாக நிற்பான் அந்த ஒளிவடிவான பிரான்!

#2631. முப்புரம் செற்ற முதல்வன்

வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற
தானவர் முப்புரஞ் செற்ற தலைவனைக்
கானவன் என்றுங் கருவரை யானென்றும்
ஊனத னுள்நினைந் தொன்றுபட் டாரே.

ஒளி மண்டலத்தில் வாழ்பவர்கள் வானவர்கள். இருள் மண்டலத்தில் வாழ்பவர்கள் தானவர்கள். வானவர்களை அடக்கி ஆண்ட தானவர்களின் முப்புரத்தைச் சிரித்தே எரித்து விட்டவன் சிவன்! அவன் நாத மாயம் ஆனவன். வீரிய கோசத்தில் விளங்குபவன். ஊனால் ஆகிய சீவர்களின் உடல்களில் உறைபவன்.

#2632. மூழ்கி நின்றேன்!

நிலைபெறு கேடென்று முன்னே படைத்த
தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம்
மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்
உலையுளும் உள்ளத்தும் மூழ்கிநின் றேனே.

சீவனுக்குப் பிறவி ஒரு பிணியைப் போன்றது. சீவன் குண்டலினியை சகசிர தளத்தில் கொண்டு சேர்த்து நிலை பெறலாம். அல்லது அதைச் செய்ய அறியாமல் வாழ்வில் கேடுறலாம் எனக் கருவிகள் கரணங்களுடன் சீவர்களைப் படைத்தவன் சிவன். அவனை நான் தலை உச்சியில் உள்ள மலையிலும், நெற்றியில் உள்ள வானவெளியிலும், சகசிரதளத்திலும், மூலாதாரத்திலும், மனமண்டலத்திலும்ஆழ்ந்து தியானித்து இருந்தேன்.

Advertisements