#2623 to #2627

2623. பக்தர் பரவும் பசுபதி!

முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரான்தனைச்
சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியைப்
பத்தர் பரசும் பசுபதி தானென்றே.

இறைவன் சீவர்களுக்கு முக்தியைத் தருகின்ற ஞான வடிவானவன். அந்தத் தலைவனே மந்திர வடிவாகவும் உள்ளான். மாயாத அமரர்களை வழி நடத்தும் பிரான் அவனே. அவன் தூயவன். தூய நெறியாக விளங்குபவன். அடியார்கள் போற்றிப் புகழும் உயிர்த்தொகைகளின் தலைவன் ஆகிய பசுபதி அவனே!

#2624. என்னை அடிமை கொண்டான்

அடியார் அடியார் அடியார்க் கடிமைக்கு
அடியவனாய் நல்கிட் டடிமையும் பூண்டேன்
அடியார் அருளால் அவனடி கூட
அடியா னிவனென் றடிமைகொண் டானே.

சிவன் அடியவர் பரம்பரையில் தோன்றிய அடியவரின், அடியவரின், அடியவரின், அடிமைக்கு அடியவன் ஆனேன். அவரிடம் அடிமையும் பூண்டு கொண்டேன். அந்த அடியாரின் அருளால் சிவஞானம் பெற்றேன். சிவன் என்னையும் தன் அடியார்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டான்.

#2625. உமாபதி ஆகிநின்றான்

நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்
ஆரிக் கடனந்தி யாமா ரறிபவர்
பாரிற் பயனாரைப் பார்க்கிலும் நேரியர்
ஊரில் உமாபதி யாகிநின் றானே.

தன்னைச் சார்ந்தவர்களுக்கு சிவன் நீரை விடக் குளிர்ந்தவன்! உலகத்தைச் சார்ந்தவருக்கு அவன் நெருப்பை விடச் சூடானவன். சிவனின் இந்தச் செயல்களை உள்ளபடி யார் அறிவார்? அவன் உலகில் செய்யும் செயலுக்குப் பயன் தருகின்றவரை விடவும் மிகவும் நேர்மையானவன். தன்னைச் சிந்தையில் பொறுத்தி வந்தனை செய்பவருக்கு உள்ளத்தின் உமாபதியாக உமை அம்மையுடன் எழுந்தருள்வான்.

2626. உலகு ஏழும் அறியாத ஒருவன்

ஒத்துல கேழும் அறியா ஒருவனென்
அத்தன் இருந்திடம் ஆரறிவார்சொல்லப்
பத்தர்தம் பத்தியிற் பாற்படில் அல்லது
முத்தினை யார்சொல்ல முந்துகின் றாரே?

ஏழு உலகங்களில் உள்ள அனைவரும் ஒன்றாகக் கூடி ஆராய்ச்சி செய்தாலும் அறிந்து கொள்ள முடியாத ஒப்பற்றவான் சிவன். எனில் என் தலைவன் சிவன் எழுந்தருளிய இடத்தை யாரால் அறிந்து கொள்ள முடியும்? பக்தரின் பக்திக்கு இரங்கி அத்தன் தன்னைத் தானே வெளிப் படுத்தினால் அன்றி முத்தைப் போன்ற அந்த முத்தி நாதனைப் பற்றிக் கூறுவதற்கு முந்துபவர் யாரோ உளர்?

#2627. கன்றாய் நாடி அழைத்தேன் நாதனை!

ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல்
நான்கன்றாய் நாடி யழைத்தேனென் நாதனை
வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள்
ஊன்கன்றா னாடிவந் துள்புகுந் தானே.

ஆவின் கன்று தன் தாயை நாடி “அம்மா!” எனக் கதறி அழைக்கும். அது போன்றே பசுத் தன்மை வாய்ந்த நான் என் தாயாகிய சிவனை பக்தியுடன் கதறி அழைத்தேன். அமரர்களுக்கும் அப்பாற்பட்ட என் தலைவன், ஊனால் ஆகிய உடலில் குடியிருக்கும் என்னை நாடி, என் மனதில் வந்து எழுந்தருளினான்.

Advertisements