#2618 to #2622

#2618. அருள் நேரே பெறுபவர் ஞானியர்

நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்
துந்தொழி லற்றுச் சுத்தம தாகலும்
பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்
துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே.

தொடர்ந்து வந்த பழைய வினைகளில் இருந்து விடுபட்டு; பாசத் தளைகளை அறுத்து எறிந்து விட்டு, நெடுங் காலம் செயல்கள் அற்று இருந்து; ஒரு சீவன் சுத்த நிலையை அடைகின்றது. ஈசனின் ஐந்தொழில்களைக் கடந்து நின்று அவன் அருளை பெறுகின்ற இத்தகைய சீவர் தூய ஞானி ஆவார்.

#2619. ஒண் சித்தி முத்தி ஆகும்

உண்மை யுணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம்
பெண்மயற் கெட்டறப் பேறட்ட சித்தியாம்
திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
வண்மை யருள்தான் அடைந்தன்பில் ஆறுமே.

சீவன் தன் உண்மையான வடிவம் ஒளிமயமானது என்று அறிந்து கொண்டால் சீவனிடம் அறிவுடன் கூடிய சித்தியும் முத்தியும் உண்டாகும். பெண்ணாசையைத் துறந்து விட்டால் சீவனுக்கு அட்டமா சித்திகளும் கைக் கூடும். உண்மையான உறுதியான சிவப் பற்றுக் கொண்ட ஒரு ஞானி தன் தேகத்தை விட்டு விட்டால் சிவத்தில் அருளை பெறுவார். பின்னர் சிவத்துடனேயே ஒன்றி விடுவார்.

#2620. சிவன் இவன் ஈசன்

அவனிவன் ஈசனென் றன்புற நாடிச்
சிவனிவன் ஈசனென் றுண்மையை யோரார்
பவனிவன் பல்வகை யாமிப் பிறவி
புவனிவன் போவது பொய்கண்ட போதே.

சீவன் சிவன் ஆக வேண்டும் என்று உறுதி பூண்டு அன்புடன் ஈசனை நாடுகின்றது. அதனால் சீவன் சிவனாகவே மாறி பதி என்னும் நிலையை அடைகின்றது. இந்த உண்மையை உலகத்தோர் உணர்வதில்லை. பின்பு சீவன் ஏன் பல பிறவிகள் எடுத்து பல உலகங்களுக்குச் செல்கின்றது? சீவன் உண்மைப் பொருளை அறிந்து கொண்டு அதனை நாடாமல் பொய்ப் பொருட்களாகிய உலக விஷயங்களில் ஈடுபடுவதே இதற்குக் காரணம்.

#2621. விதிக்கின்ற ஐவர்

கொதிக்கின்ற வாறுங் குளிர்கின்ற வாறும்
பதிக்கின்ற வாறிந்தப் பாரக முற்றும்
விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம்
நொதிக்கின்ற காயத்து நூலொன்று மாமே.

உலகம் முழுவதும் துன்புறமாறு சீவர்களுக்குப் பரு உடலைத் தருவதும், பின்னர் அதை நீக்குவதும், மீண்டும் அவர்களைப் பிறவியில் கொண்டு தள்ளுவதும் செய்வது நான்முகன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் என்ற ஐந்து தெய்வங்கள். அறிவுடையோர் இந்த ஐவரையும் விரும்ப மாட்டார். பரு உடலில் இருந்து நுண் உடலுக்குச் செல்லும் சுழுமுனை நாடியில் இவர்கள் பொருந்தி இருப்பதே அதற்குக் காரணம்.

#2622. மூல வித்து ஆகும்

உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தையில் வைத்துத் தெளிவுறச் சேர்த்திட்டால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.

“உய்ந்து விட்டோம்! ஞானம் பெற்றோம்! இனிப் பிறவி இல்லை!” என்பீர்கள். அந்த ஞானத்துக்கு அடிப்படை இன்னதென்று அறிவீரா? மூலாதாரத்தில் வீரிய சக்தியாகக் கலந்துள்ளார் உருத்திர மூர்த்தி. சிந்தனையால் மூலாக்கினியை மேலே எழச்செய்து அதை ஒளிமயமாகக் காண்பதே வரவிருக்கும் பிறவிகளை ஒழிப்பதற்கு உரிய வழியாகும்.