#2566 & #2567

#2566. இலக்கணாதீதம் சொரூபமே

விட்ட இலக்கணைதான்போம் வியோமத்துத்
தொட்டு விடாத துபசாந்தத் தேதொகும்
விட்டு விடாதது மேவுஞ்சத் தாதியிற்
சுட்டு மிலக்கணா தீதம் சொருபமே.

“ஆன்மா வானத்தில் செல்லும்!” என்பது ‘விட்ட இலக்கணை’.
ஏனென்றால் போக்குவரவு இல்லாதது ஆன்மா. இங்கு ‘ஆன்மா’ என்ற சொல் நுண்ணுடலைகே குறிக்கின்றது.

“ஆன்மா உபசாந்தத்தில் அமையும்” இது விடாத இலக்கணை.
ஏனென்றால் துன்ப நிலையில் இருந்த அதே ஆன்மா இன்ப நிலையில் பொருந்தியுள்ளது.

“ஆன்மா சத்தம் முதலியவற்றை உணரும்!” இது விட்டும் விடாத இலக்கணை.
ஏனென்றால் சத்தம் முதலியவற்றை ஆன்மா தானே உணருவதில்லை. அவற்றை ஆன்மா ஐம்பொறிகளின் வழியே உணர்கின்றது.

#2567. கதிர் எதிராகும்!

வில்லின் விசைநாணிற்கோத்து இலக்கெய்தபின்
கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தன
வில்லுள் இருந்து எறி கூரும் ஒருவற்குக்
கல்கலன் என்னக் கதிரெதி ராமே.

சீவன், பிரணவம் என்ற வில்லில், புருவ மத்தியையும் பிடரிக் கண்ணையும் இணைக்கும் நாணைப் பூட்ட வேண்டும். இந்த நாணின் விசையால் அம்பினை இலக்கை நோக்கி எய்ததும் ஐம்பொறிகள் ஆகிய யானைகள் சாய்ந்து விழுந்துவிடும். பிரணவ வில்லில் இருந்து உயரச் சென்றவருக்குக் கதிர் வீசி ஒளிரும் நவமணிகள் போன்ற சிவன் வெளிப்படுவான்!