#2142 to #2146

#2142. மெய் கண்டவன் உந்தி துரியமே

ஐயைந்து மத்திமை யானது சாக்கிரம்
கைகண்ட பன்னான்கிற் கண்டம் கனாஎன்பர்
பொய்கண் டிலாத புருடனித யம்சுழுமுனை
மெய்கண்ட வனுந்தி யாகும் துரியமே.

விழிப்பு நிலையில் சீவன் புருவ மத்தியில் இருபத்து ஐந்து கருவிகளுடன் நிலை கொண்டிருக்கும். கனவு நிலையில் சீவன் கழுத்தில் பதினான்கு கருவிகளுடன் நிலை கொண்டிருக்கும். சீவன் இதயத்தில் நிலை பெற்றுள்ள போது உறக்க நிலை ஏற்படும். ஆன்மா உந்தியில் பொருந்தி நிற்கும் போது துரிய நிலை ஏற்படும்.

சாக்கிரத்துக்கு உரிய 25 கருவிகள்:
1. ஞானேந்திரியங்கள் …………….5
2. கர்மேந்திரியங்கள்………………5
3. வாயுக்கள்………………….10
4. அந்தக்கரணங்கள்………………4
5. புருடன்……………………1

கனவு நிலைக்கு உரிய 14 கருவிகள்:
1. வாயுக்கள்………………….10
2. அந்தக்கரணங்கள்………………4

சுழுத்தி நிலையில் பிராணவாயு, சித்தம் இரண்டும் இயங்கும்.

துரிய நிலையில் இயங்கும் ஒரே கருவி பிராணன் மட்டுமே.

#2143. முப்பத்தாறு தத்துவங்கள்

முப்பதோடு ஆறில் முதல் நனா ஐயைந்தாகச்
செப்புஅதின் நான்காய் திகழ்ந்தது இரண்டு ஒன்று ஆகி
அப்பதி யாகும் நியதி முதலாகச்
செப்பும் சிவம் ஈறாய்த் தேர்ந்து கொள்வீரே.

சாக்கிர நிலையில் முப்பத்தாறு தத்துவங்களுடன் சிவ தத்துவம் ஐந்தாகும். கனவு நிலையில் அது நான்காகும். துரியத்தில் அது இரண்டாகும். துரியாதீதத்தில் ஒன்று ஆகும். சுத்த வித்தை முதல் சிவன் ஈறாக அமைவது இவ்வாறே.

#2144. சாக்கிர அவத்தை

இந்தியம் ஈர்ஐந்து, ஈர் ஐந்து மாத்திரை
மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும்
அந்தக் கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்
பந்த அச்சாக்கிரப் பாலது ஆகுமே.

ஞான இந்திரியங்கள் ஐந்து + கர்ம இந்திரியங்கள் ஐந்து + தன்மாத்திரைகள் பத்து + வாயுக்கள் பத்து + அந்தக் கரணங்கள் நான்கு + ஆன்மா என்ற முப்பது ஐந்து கருவிகளும் சீவனைப் பந்தப் படுத்துகின்ற சாக்கிரத நிலையில் உள்ள கருவிகள்.

#2145. ஐம்பெரும் பூதங்களின் நிறங்கள்

பாராது பன்மை பசுமை யுடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதங் கறுப்பை யுடையது
வானகம் தூம மறைந்து நின்றாரே.

மண் பசும் பொன் நிறம் உடையது. நீர் வெண்ணிறம் கொண்டது. தீயின் நிறம் சிவப்பு. மேகம் போன்ற கரிய நிறம் கொண்டது காற்று. வானம் புகையின் நிறம் கொண்டது. இந்த நிறங்களில் ஐம் பெரும் பூதங்கள் இருக்கும்.

#2146. தொண்ணூற்றாறு கருவிகள்

பூதங்கள் ஐந்தும், பொறிவை ஐயைந்துளும்
ஏதம் படஞ் செய்து இருந்த புறநிலை
ஓதும் மலம் குணம் ஆகும் ஆதாரமோடு
ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே.

ஐந்து பூதங்கள், ஐந்து பொறிகள், புறக் கருவிகள், இவற்றுடன் மும்மலம் முக்குணம் கலந்து விளைகின்ற தொண்ணூற்றாறு கருவிகள் சாக்கிர அவத்தைக்கு உரியன.

அறுபத்தெட்டுத் தத்துவங்கள்

உடல் உறுப்புகளில் பஞ்சபூதங்களின் கூறுகள் வருமாறு:

1. மண் : எலும்பு, தோல், இறைச்சி, நரம்பு, மயிர்.

2. நீர் : உதிரம், மஞ்சை, உமிழ் நீர், நிணம், விந்து.

3. தீ : பயம், கோபம், அகங்காரம், சோம்பல், உறக்கம்.

4. காற்று : போதல், வருதல், நோய்ப்படுதல், ஒடுங்குதல், தொடுதல்.

5. ஆகாயம்: ஆசை, உட்பகை, மோகம், மதம், வஞ்சனை.

6. கர்மேந்திரியங்கள் ஐந்து: வாக்கு, பாணி, பாதம்,குதம், குய்யம்

7. வாயுக்கள் பத்து :

பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன் , கூர்மன், கிரிதரன், தேவதத்தன் , தனஞ்ஜயன்

8. நாடிகள் பத்து

பிங்கலை, இடைகலை, சுழுமுனை, சிகுவை, காந்தாரி, புருடன், அத்தி, அலம்புடை , சங்கினி, குரு.

9. வாக்குகள் நான்கு: சூக்குமை, பைசந்தி மத்திமை, வைகரி

10. ஈஷணை மூன்று

11. குணம் மூன்று: சத்துவம், ராஜசம், தாமசம்

12, தன்மாத்திரைகள் ஐந்து: சப்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்

13. அந்தக்கரணம் நான்கு: மனம், புத்தி, சித்தம், அகங்காரம்