#2302 & #2303

#2302. ஆன்மாவின் தூயநிலை

கேவலம் தன்னின் கலவச் சகலத்தின்
மேவும் செலவு விடவரு நீக்கத்துப்
பாவும் தனைக்கண்டால் மூன்றும் படர்வற்ற
தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.

கேவல அவத்தையில் உள்ள ஆன்மா கருவிகள் கரணங்களுடன் கலந்து சகல அவத்தையை அடையும். ஆன்மா கருவிகள், கரணங்கள் இவற்றை விட்டு விட்டதும் சகல நிலையில் இருந்து பிரிந்து விடும். கேவலம், சகலம் என்ற இந்த இரண்டு நிலைகளையும் துறந்து விட்ட ஆன்மா தன்னைத் தானே அறிந்து கொள்ளும். இது மூன்றாவது நிலை. ஆன்மா இம்மூன்று நிலைகளையும் கடந்து சென்று சாக்கிராதீத நிலயை அடைந்து அங்கு பொருந்தி இருப்பதே ஆன்மாவின் தூய நிலை எனப்படும்.

#2303. சினத்தைத் துறந்தால் விளையும் பயன்

வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்
செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி யாமே.

சினத்தை உங்களால் முடிந்த அளவுகுத் துறந்து விடுங்கள்.
உள்ளத்தை உங்களால் முடிந்த அளவுக்கு சிவன் மேல் செலுத்துங்கள்.
இரவும் பகலும் சிவன் நினைவுடன் துரியத்தில் சமாதியில் பொருந்தி இருங்கள்.
அப்போது கற்பாறை போன்ற கனத்த பாச இருள் அகன்று விடும்.
நீங்கள் பரம ஆகாய மண்டலத்தின் ஒளியை உணர்வீர்கள்.