#2299 to #2301

#2299. உலக நோக்கு இருந்தால் நாதம் விளங்காது

அஞ்சில் அமுதும், ஓர் ஏழின்கண் ஆனந்தம்
முஞ்சில்ஓங் காரம், ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சக மேநின்று வைத்திடில், காயமாம்
கிஞ்சுகக் செவ்வாய்க் கிளிமொழி கேளே.

ஐந்தாவது கலையாகிய அர்த்த சந்திரனின் இடம் புருவமத்தி. இது விழிப்பு அடைந்து விட்டால் அமுத மயமான ஒளி பெருகும். ஏழாவது கலையாகிய நிரோதினி ஆன்மாவுக்கு ஆனந்தத்தை அளிக்கும். விந்து ஜெயம் பெறுவதே பிரணவம் ஆகும். ஒன்பதாவது கலைக்கு மேல் பிரணவம் விளங்கும். பதினோராவது நிலையாகிய சிவதுரியம் ஓர் அவத்தையே. இந்த நிலைகளே ஆன்மாவின் பராவத்தை.

2300. புரியட்டகம் ஒளிமயமாகும்

புருட னுடனே பொருந்திய சித்தம்
அருவமொ டாறும் அதீதத் துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்
அரிய பதினொன்று மாம்அவ் அவத்தையே.

ஆன்மாவின் துரியாதீத நிலையில் புருடன் மற்றும் ஐந்து சிவத்துவங்கள் என்னும் ஆறும் விளங்கும். உறக்க நிலையில் புரியட்டகம் என்னும் நுண்ணுடல் விளங்கும். நனவு, கனவு நிலைகளில் வித்தியா தத்துவம் விளங்கும். இந்நிலைகளில் உட்கரணங்கள் நான்கும் பொருந்தி அமையும்.
புரியட்டகம் : மனம், புத்தி, அஹங்காரம், சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் பொருந்திய நுண்ணுடல்

#2301. சிவத்தின் வழியே நிற்பது நன்மை

காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல்
நாட்டி அழுத்திடின் நந்திஅல்லால் இல்லை
ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை
ஈட்டு மதுதிடம் எண்ணலும் ஆமே.

வித்தியாததுவங்கள் எழும், அந்தக் கரணங்கள் நான்கும் ஆகிய பதினோரு தத்துவங்களும் ஒன்று கூடினால் உடல் அமையும். இவை செயல் படாது நின்றால் அப்போது சிவன் அமைவான். அந்தக் கரணங்களின் வழி சென்று அலைந்து திரியாமல் சிவத்தின் வழியே நிற்பதுவே நன்மை பயக்கும் என்று நீ அறிந்து கொள்வாய்!

Advertisements