#2122 to #2126

#2122. காயப்பைக் குள்நின்ற கள்வன்

காயப்பை யொன்று சரக்கு பலவுள
மாயப்பை யொன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக் குள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணாய் மயங்கிய வாறே.

சீவனின் உடலில் ‘காயப்பை’ என்னும் அன்னமய கோசம் ஒன்று உண்டு. அதனுள் பலவிதமான பொருட்கள் நிரம்பி உள்ளன. காயப்பையின் உள்ளே மாயப்பை ஒன்று உண்டு. அதற்குள் வேறு ஒரு பையும் உண்டு. காயப் பைக்குள் வாழும் சீவன் என்னும் கள்வன் அதை விட்டு விட்டுப் புறப்பட்டால் பின்னர் அந்த மாயப்பை மண்ணோடு மண்ணாகி விடும்.

#2123. புரி அட்ட காயமே

அத்தன் அமைத்த உடல் இரு கூறினில்,
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த, பரிச, ரூப, ரச, கந்தம்
புத்திமான் ஆங்காரம் புரியட்ட காயமே.

நம் தலைவன் சீவனுக்கு இரண்டு உடல் கூறுகளை அமைத்துள்ளான். தூல உடல் (பரு உடல்) என்றும் சூக்கும உடல் (நுண்ணுடல்) என்றும் அவை இரண்டு வகைப்படும். தூய நுண்ணுடலில் அமைத்து உள்ளவை சத்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம். கந்தம், புத்தி , மனம், அகங்காரம் என்பவை. அதனால் அதன் பெயர் புரியட்ட காயம்.

#2124. கண்ணுதல் காணுமே

எட்டினில் ஐந்தாகும் இந்திரியங்களும்
கட்டிய மூன்றுங் கரணமு மாயிடும்
ஒட்டிய பாச முணர்வது வாகவே
கட்டி யவிழ்ந்திடும் கண்ணுதல் காணுமே.

இந்த எட்டினில் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்ற முதல் ஐந்தும் தன்மாத்திரைகள் ஆகும் அவற்றிலிருந்து சீவனின் ஐம்பொறிகள் தோன்றும். புத்தி, மனம், அகங்காரம் என்ற மற்ற மூன்றும் அந்தக்காணங்கள் எனப்படும் உட்கருவிகள் ஆகும். இவற்றுடன் பாச உணர்வையும் கூட்டிச் சீவனைக் கட்டியும், கட்டவிழ்த்தும் கண்ணுதல் பிரான் அருள்வான்.

#2125. உடல் ஒன்று எனல் ஆமோ?

இரதம், உதிரம், இறைச்சி, தோல், மேதை,
மருவிய அத்தி, வழும்பொடு, மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவ மாலால், உடல் ஒன்று எனல் ஆமே.

பாழாகிய உபாதியின் காரியமான மயக்கத்தைத் தருகின்ற இந்த உடல் நிணநீர், உதிரம், இறைச்சி, தோல், மேதை, எலும்பு, வழும்பு, மச்சை சுக்கிலம் என்ற பலவற்றால் ஆனது. எனவே இந்த உடலை ‘ஒரு பொருள்’ என்று இயம்ப இயலுமா ?

#2126. யாரே அறிவார்?

ஆரே அறிவார் அடியின் பெருமையை
யாரே அறிவார் அங்கவர் நின்றதை,
யாரே அறிவார் அறுபத்தெட்டு யாக்கையை
யாரே அறிவார் அடிக்காவல் ஆனதே.

ஈசன் திருவடிகளின் பெருமையை யார் அறிவார்? சீவனின் உடலில் சிவன் உறைவதை யார் அறிவார்?
அறுபத்தெட்டுத் தத்துவங்களைக் கொண்டுள்ள இந்த உடலை யார் அறிவார்? சிவன் சீவனின் அடிக்காவலாக அதன் மூலாதாரத்தில் இருந்து காப்பதை யார் அறிவார்?

அறுபத்தெட்டுத் தத்துவங்கள்

உடல் உறுப்புகளில் பஞ்சபூதங்களின் கூறுகள் வருமாறு:

1. மண் : எலும்பு, தோல், இறைச்சி, நரம்பு, மயிர்.

2. நீர் : உதிரம், மஞ்சை, உமிழ் நீர், நிணம், விந்து.

3. தீ : பயம், கோபம், அகங்காரம், சோம்பல், உறக்கம்.

4. காற்று : போதல், வருதல், நோய்ப்படுதல், ஒடுங்குதல், தொடுதல்.

5. ஆகாயம்: ஆசை, உட்பகை, மோகம், மதம், வஞ்சனை.

6. கர்மேந்திரியங்கள் ஐந்து: வாக்கு, பாணி, பாதம்,குதம், குய்யம்

7. வாயுக்கள் பத்து :

பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன் , கூர்மன், கிரிதரன், தேவதத்தன், தனஞ்ஜயன்

8. நாடிகள் பத்து

பிங்கலை, இடைகலை, சுழுமுனை, சிகுவை, காந்தாரி, புருடன், அத்தி, அலம்புடை , சங்கினி, குரு.

9. வாக்குகள் நான்கு: சூக்குமை, பைசந்தி மத்திமை, வைகரி

10. ஈஷணை மூன்று

11. குணம் மூன்று: சத்துவம், ராஜசம், தாமசம்

12, தன்மாத்திரைகள் ஐந்து: சப்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்

13. அந்தக்கரணம் நான்கு: மனம், புத்தி, சித்தம், அகங்காரம்